No results found

  அருளும் பொருளும் தரும் லட்சுமி பஞ்சமி விரதம்


  சித்திரை மாதத்தில் பல்வேறு விழாக்கள், விரதங்கள் இருக்கின்றன.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு மிக்கவை. ஒவ்வொரு காரணத்தோடு இருப்பவை. அதில் ஒன்றுதான் ஸ்ரீ லட்சுமி பஞ்சமி. இது திருமகளுக்கான விழா. பொதுவாக சில விரதங்கள் நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன. சில விரதங்கள் திதியின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகின்றன. “லட்சுமி பஞ்சமி”, திதியின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகின்ற ஓர் வழிபாட்டுத்தினமாகும். இது திருமகளுக்கு உரிய வழிபாடு என்பதால் இதனை “ஸ்ரீபஞ்சமி” என்றும் “ஸ்ரீவிரதம்” என்றும் சொல்கிறார்கள். சித்திரை மாதத்திலே வளர்பிறையில் ஐந்தாவது திதியான பஞ்சமியில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

  இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக, தொழில் வளம் பெருகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் வறுமை நீங்கும். திருமகளின் இன்னருள் சிறக்கும். இது வெளிப்படையான பலன்கள். குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்குவதும், சுபநிகழ்ச்சிகள் நடப்பதும், வீடு, வாகனம் முதலிய பொருள் சேர்க்கை ஏற்படுவதும் இந்த லட்சுமி விரதத்தால் கிடைக்கக்கூடிய நற்பலன்கள் என்று சாத்திர நூல்கள் பேசுகின்றன. ஒருவருக்கு திருமகள் அருள் இருக்கின்ற பொழுது அவனுக்கு செல்வமும் பதவியும் பட்டமும் தானே கூடும். அந்தத் திருமகள் அருள் கிடைக்காத பொழுது, அவன் இருளில் தள்ளப்படுவான். மனதில் குழப்பமான எண்ணங்களே நிலவும். எதிலும் தெளி

  வில்லாமல் இருப்பான். தொட்ட காரியங்கள் துலங்காது. எனவே, திருமகளை வணங்குவது மிக முக்கியம். அதனால்தான் வியாபாரத் தலங்களில் லட்சுமி படம் லட்சுமி  எந்திரங்களும் வைத்திருக்கிறார்கள். நிலை வாசலில்மஞ்சள் குங்குமம் வைத்து திருமகளை வரவேற்பதற்காக ஒரு விளக்கு ஏற்றி வைப்பதை முறையாகக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட திருமகளை விரதமிருந்து துதிப்பதுதான் இந்த லட்சுமி பஞ்சமியின் நோக்கம். இந்த லட்சுமி பூஜை செய்வதற்கு வேறுசில தினங்களும் இருக்கின்றன. (நவராத்திரி, தீபாவளி, வெள்ளிக்கிழமை - திருமகள் பூஜைக்கு என்றே  ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.) பூஜை அன்று காலையில் எழுந்து, வீட்டைத் தூய்மை செய்து, வீட்டில் உள்ள அனை வரும் நீராடிவிட்டு, பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதிலே கோலம் போட்டு, கலசத்தை ஆவாஹனம் பண்ண வேண்டும். அந்தக் கலசத்தில் திருமகளுக்கான லட்சுமி மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் செய்ய வேண்டும்.

  “ஓம் ஸ்ரீமகாலட்சுமி ச வித்மஹே விஷ்ணுபத்ந்யைச தீமஹி தந்நோ லக்ஷ்மி, ப்ரசோதயாத்” என்ற காயத்திரி மந்திரத்தை தவறில்லாமல் உச்சரித்து, ‘‘இந்த கலசத்தில், மஹாலஷ்மி தாயே வந்து அமர வேண்டும். எங்கள் எளிய  பூஜையை ஏற்றுக்கொண்டு திருப்தி அடைய வேண்டும்’’ என்று மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்தக் கலசத்திற்கு வஸ்திரம், மாலை, ஆபரணங்கள் முதலியவற்றை அணிவிக்க வேண்டும். “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நமஹ” என்கிற லஷ்மி குபேர மந்திரத்தை 108 முறை ஜபிக்கலாம். ஒருபொழுது விரதமிருந்து, மாலையில் பல்வேறு கனிகளோடு நிவேதனம் படைத்து முறையாக வழிபாடு நடத்தி தீபாராதனை காண்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அன்று விசேஷமாக திருமகளுக்கு உரிய ஸ்ரீசூக்த பாராயணம், (இது மட்டும் வேத பண்டிதரைக்  கொண்டு செய்யவும்), விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம், கனகதாரா ஸ்தோத்ரம், லட்சுமி ஸஹஸ்ரநாம பாராயணம்,லட்சுமி அஷ்டோத்திர மந்திரங்கள் மற்றும் உங்களுக்குத் தெரிந்த திருமகளுக்குரிய தெய்வீகப் பாடல்களைப் பாடி, பூஜையை முடித்து கொள்ளலாம்.

  ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று நம்முடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கிருஷ்ணராக பாவிப்பது போல, இந்த லட்சுமி பஞ்சமியில், நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண் பிள்ளைகளுக்கு, நல்ல ஆடை அணிகலன்களை அணிவித்து, திருமகளாகவே பாவித்து பூஜையை அவர்களோடு இணைந்து நடத்த வேண்டும். காலையில் விரதமிருந்து மாலையில் இந்த பூஜையைச்  செய்ய வேண்டும். இதனால் கடன் தொல்லைகள் நீங்கும். தொழிலில் லாபம் பெருகும். பொருளாதாரத்தில் மிகவும் சிரமப்படுகிறவர்கள் இந்தப் பூஜையைச் செய்வதோடு, தொடர்ந்து ஐந்து வியாழக்கிழமைகளில், லட்சுமி மந்திரத்தைச் சொல்லி, குபேர தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினால், பொருளாதார சிக்கல்கள் தீரும். மிக முக்கியமாக அன்றைய பூஜை நிவேதனங்களில் இரண்டு மூன்று இனிப்புப் பதார்த்தங்களைச் செய்து வழிபாடு நடத்துவது மிகவும் சிறப்பு.

  Previous Next

  نموذج الاتصال